Pugalur kalvettu
ஐராவதம் மகாதேவன் ஆராய்ந்திருக்கும் இந்தக் கல்வெட்டுக்கள் வழி தெரியவரும் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுநிலைகள் முக்கியமானவை.
தமிழ் பிராமிக் கல்வெட்டுக்களில் உறவுப்பெயர்கள் பல வருவதை நன்கு அவதானிக்க வேண்டும். இவற்றில் தந்தை, தாயியரு, மகன், மகள் (குறுமகள்), பின்னன், சாலகன் போன்ற பெயர்ச்சொற்கள் வருகின்றன. சாலகன் எனும் சொல் தற்கால வழக்கில் சகலன் என நிற்கும் (மனைவியின் சகோதரியின் கணவன்). அதே போல, தந்தை எனும் சொல்லின் வரலாறு பற்றி மகாதேவனின் கருத்தை, மிகப் பெரிய வரலாற்றுப் பங்களிப்பென்று பேராசிரியர் சுப்பராயலு கூறுகிறார். அந்தை என்பது மரியாதைக் குறிப்புச் சொல்லாயிருந்து, பின்னர் தகப்பனைக் குறித்தது என்றும் அதை நுந்தை போன்ற வடிவங்களில் காணலாம் என்றும் கூறுகிறார். தாயியரு எனும் சொல்லிற் கன்னடப்பாங்கு நன்கு தெரிகிறது. தாய் என்பது 'தன் ஆய்' என்பதே. சகோதரர்கள் பற்றிய தரவும் உள்ளது. இவை யாவும் மையக் குடும்ப உறவுகளாகும்.
சகலன் பற்றிய குறிப்பு அக்காலத்தில் நிலவிய குடும்ப விரிநிலை-அமைப்பைக் (extended family structure) குறிக்கிறது. அதாவது சமூகத்தின் அடி-அலகான குடும்ப அலகு, விதிநிலை அளவாகப் பேணப்படுகின்ற அளவிற்குக் குடும்ப அமைப்பு இருந்தமை ஒரு முக்கியமான தரவாகும். குறுமகள் என்பது சிறு குழந்தையைக் குறிப்பது. இந்தச் சொற்றொடர் சங்க இலக்கியங்களிலும் வரும் ஒன்று. குடும்ப மட்டத்துக்கு மேல் அடுத்துவரும் சமூக ஒழுங்கமைவு ஆட்சிநிலை, ஆளுகைநிலை (rule, governance) நிலை பற்றியதாகும்.
இந்தக் கல்வெட்டுக்கள்வழி தமிழகத்தின் அரசியல் வரலாற்றுக்கான முக்கியத்தரவுகள் கிடைக்கின்றன. இவற்றுள் மிக முக்கியமானது, சேரர் வரலாறு பற்றிக் கூறும் புகளூர்க் கல்வெட்டு, கரூர் அருகில் இருப்பது. இதில் வருவது ஆதன் செல் இரும்பொறை, பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ ஆகிய சேர அரசர்கள் பற்றிய குறிப்பு. இவை, எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்தின் ஏழாம், எட்டாம், ஒன்பதாம் பதிகங்கள் குறிப்பிடும் தரவுகளை மெய்ப்பிப்பனவாக உள்ளன (9). இந்தக் குறிப்பு, சங்க இலக்கியத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. ஏனெனில் முன்னர் பதிற்றுப்பத்துப் பதிகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மரபு இருந்திருக்கவில்லை. அதேபோல சேர ஆட்சிப் பரம்பரை பற்றிய சேர என்ற குறிப்பும் ஒரு கல்வெட்டில் வருகின்றது (எடக்கல் கல்வெட்டு - அ.2, பக்கம் 433). ஆக, புகளூர்க் கல்வெட்டின் வாசிப்பு வழி பதிற்றுப்பத்தில் வருகிற சேர அரசர்களின் வம்சாவழி தெரியும் முறையில் சங்க காலம் என்பதைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தொடங்கலாம் என்று கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆக, மூவேந்தர்களின் வரலாற்று-இருப்பு மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது. அரசினைக் குறிக்கும் கோன் என்ற சொல்லும் காணப்படுகிறது (திருமலைக் கல்வெட்டு - 2, பக்கம்.389). (10) சேர, சோழ, பாண்டிய அரசர்கள் இருந்த காலத்தில், பல பிரதானிகளும் இருந்தனர் என்பது ஏற்கனவே நிறுவியாகிவிட்ட ஓர் உண்மை. எடுத்துக்காட்டாக ஒரு, சங்ககால சிறப்புப் பெயர் - துறை அரங்கனார். நாகன் என்றவொரு பிரதானியின் குறிப்பு இந்தக் கல்வெட்டுக்களில் உண்டு (அழகர்மலைக் கல்வெட்டு - 13).
அதேவேளை இந்தக்கல்வெட்டுக்களின் பொதுவான அம்சம், இவை சமண முனிவர்களுக்கான குகைக்கொடைகள் பற்றியே அமைந்திருப்பது. அக்காலத் தமிழகத்தின் அரசுருவாக்க நிலை பற்றியோ வைதீக மரபுச் செல்வாக்குகள் பற்றியோ ஏதும் நேரடியாகப் பேசவில்லை. சில இடங்களில் சிலவற்றை இப்படி உய்த்துணர முடிகிறதே தவிர, இந்தக் கல்வெட்டுக்கள் திறந்த வரலாறு என ஒன்றைத் தரவில்லை என்பது மகாதேவன் செய்திருக்கும் ஆய்வின் முக்கிய முடிவுகளின் ஒன்று.
இவற்றளவு முக்கியமான இன்னோர் உண்மையையும் மகாதேவன் வெளிக்கொணர்ந்திருக்கிறார். இது ஊர் பற்றிய குறிப்பு. இந்தக் கல்வெட்டுக்களில் வரும் நிர்வாக ஒழுங்கமைவு பற்றிக் குறிப்பிடும்போது ஊர் எனும் சொல்லின் பயில்வு பற்றி இவர் குறிப்பிடுகிறார். இந்தச்சொல் பல்லவ, சோழ காலங்களிலே பெற்றிருந்த நிர்வாக அமைப்பு நுண்மையை இங்கேயும் சுட்டுகின்றதெனக் கொள்ள முடியாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட புவியியல் இயைபுள்ள குடியிருப்புகளின் தொகுதியை ஊர் எனும் அலகாகக் கொள்ளும் தன்மை காணப்படுகிறது என்ற வகையில் மகாதேவனின் குறிப்புச் செல்கிறது. ஆனால், பேராசிரியர் சம்பகலட்சுமி சுட்டுவதுபோல, பிற்காலத்தில் சுட்டி நின்ற எண்ணக்கருக்களை தமிழ் பிராமிக் கல்வெட்டுக் காலத்துக்கும் கொள்வது பொருத்தமாகாது. எனினும், ஊர் ஒரு முக்கியமான அலகாக இருந்திருக்க வேண்டும் என்பதை மறுக்க முடியாதுள்ளது.
உண்மையில் பிராமிக் கல்வெட்டு நிலையில் ஊர் என்பது பொருளாதார உற்பத்தி முறைமை ஒன்றோ, இரண்டோ தொழிற்படுகிற ஒரு குடியிருப்பு (settlement) அலகாகவே கொள்ளப்பட வேண்டும் போலத் தெரிகிறது. சங்க இலக்கியங்களிலும் ஊர், ஊரன் எனும் தொடர்கள் நிறைய வந்துள்ளன.
சங்க இலக்கியத்தில் அடிக்கடி வரும் கிழான் எனும் சொல் கல்வெட்டுக்களில் காணப்படுவது, நாம் சங்க இலக்கியம் வழியாக மேற்கொண்ட சிந்தனையை உறுதிசெய்வதாக அமைகிறது. உரித்துடையவன் என்ற கருத்தில் வரும் கிழான் எனும் சொல்லின் வருகை, ஆட்சி அதிகார நிலைக்குக்கீழ் வருவோரும் சொத்துரிமை காரணமாக முக்கியத்துவம் பெறும் நிலையையே இச்சொற் பயன்பாடு சுட்டுகிறது எனலாம். சங்க இலக்கியத்தில் நல்லைக் கிழான் நாகன் பெயர் வருகிறது (11).
இந்த இடத்தில், இந்தக்கல்வெட்டுக்கள் வழியும் சங்க இலக்கியத்தின் வழியும் புலப்படும் பொருளாதார ஒழுங்கமைப்பு வடிக்கை முறைமைகள் பற்றிய ஒரு குறிப்பு அவசியமாகிறன்றே கருதுகிறேன். கல்வெட்டுக்களில் வரும் குறிப்புக்களின் அடிப்படையில் மகாதேவன் கூறும் பொருளாதார விடயங்களை, இந்தக் கல்வெட்டுக்களின் பரம்பல் அடிப்படையிலும் இணைத்தே நோக்கல் வேண்டும். அவ்வாறு நோக்கும்போது இநத்க் கல்வெட்டுப் பரம்பலுள்ள பிரதேசமும் - சிறப்பாகக் கூறினால் - இந்தக் கல்வெட்டுக்களைப் பொறிப்பித்தவர்களுக்குத் தளமாகவுள்ள வேளாண்மை நடவடிக்கைகளும் நன்கு ஒழுங்கமைந்தவை என்றே தெரிகின்றன.
வேளாண்மைக்கான உற்பத்திக் கருவிகள் (இரும்பாலான கொழு; கரும்பு இயந்திரம்) முக்கியமாகின்றன. கல்வெட்டுக்கள் ஊடாக மேற்கிளம்பும் பொருளாதாரப் படிமத்தினுள் திணைக்கோட்பாட்டின் அடியாகத் தெரியவரும் நில வேறுபாடு, உற்பத்திமுறை வேறுபாடு ஆகியன தெளிவாக வரவில்லை. நானிலம், அவற்றின் கருப்பொருள் வேறுபாடு (உற்பத்தி, பண்பாடு) ஆதியன இலக்கியங்கள் மூலமாகவே தெளிவாகத் தெரியவருகின்றன (12). இலக்கியங்கள் ஊடாகவும் அவற்றை நோக்கும் முறைமையைத் தீர்மானித்துள்ள தொல்காப்பியப் பொருளதிகாரம் மூலமாக, தமிழகம் என்ற முழு நிலப்பரப்பினையும் காணக் கூடியதாயுள்ளது. அதற்குள் ஒருவிதக் காலப்பார்வை (diachronic) தெரிகிறது. ஆக, நிலச்சொத்துரிமை வழி, அதிகார வழி முக்கியத்துவங்களைப் பற்றிப்பேசும் இக்கட்டத்தில், கல்வெட்டுக்களோ கொத்தணி-கொத்தணிகளாக (clusters) கால-இயைபு கொண்ட (synchronic) களப்பார்வையையே காட்டுகின்றன.
இவ்வாறு நோக்கும்போது இலக்கியங்களும், கல்வெட்டுக்களும் தொல்காப்பியப் பொருளதிகாரமும் ஒன்றுக்கொன்று இணைவாக நின்று (supplementary) ஓர் ஒட்டுமொத்தமான முழுமை நோக்கினைத் தருகின்றன எனலாம்.
அடிக்குறிப்புக்கள்
9. 1966-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோலாலம்பூர் நகரில் நடந்த முதல் உலகத்தமிழ் மாநாட்டில் மகாதேவன் இதை முதலில் அறிவித்து, இந்தக் குறிப்பு விவாதத்துக்கு வந்தது. Iravatham Mahadevan, Tamil Brahmi inscriptions of the Cankam age, First International Conference of Tamil Studies, Kualalampur, 1966.
10. இது பற்றிய குறிப்பை என் பின்வரும் நூலில் காணலாம்: Karthirgesu Sivathamby, Studies in ancient Tamil society : economy, society, and state formation, Chennai, 1995.
11. மேற்கண்ட என் நூலில் தமிழகத்தில் ஆளுகை அல்லது ஆட்சி அதிகாரம் வளர்ந்திருக்கக் கூடிய முறைமை பற்றி வாசிக்கலாம்.
12. மேற்கண்ட என் நூலில் உள்ள திணைக்கோட்பாடு பற்றிய கட்டுரையை வாசிக்கலாம்.
(தொடரும்)